நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.அஜித் பவாரை நம்பி ஆட்சியமைத்த பாஜக, மெஜாரிட்டி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டு பதவியேற்ற 3 நாளிலேயே ராஜினாமா செய்துள்ளதால், உத்தவ் தாக்கரே முதல்வராவது உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெற்று 24-ந் தேதி முடிவுகள் வெளியானது.கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக – சிவசேனா கூட்டணிக்கு மெஜாரிட்டி பலம் கிடைத்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது. இதனால் யாரும் ஆட்சி அமைக்க முடியாமல் போக, கடந்த 12-ந் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இடையில் சிவசேனாவுக்கு ஆதரவு தர என்.சி.பி., காங்கிரஸ் கட்சிகள் முன்வர , பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து கடந்த 22-ந் தேதி மாலை சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைக்கும் முடிவுக்கு வந்தன.
ஆனால் அன்றிரவே, திரைமறைவில் அதிரடியாக காய் நகர்த்திய பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரை அணி மாறச் செய்து, 23-ந் தேதி காலை ரகசியமாக பதவியேற்பு விழாவை அரங்கேற்றியது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்க, சிவசேனா கூட்டணி அதிர்ச்சியில் உறைந்தது .
ஆனாலும், சிவசேனா கூட்டணிக் கட்சிகள் தங்கள் பக்கம் தான் பெரும்பான்மை உள்ளது என்பதை பல வழிகளில் நிரூபித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டத்தை நடத்தின. 2 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து, இன்று காலை உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. நாளை மாலை 5 மணிக்குள், பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பட்னா விஸ் அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் மகாராஷ்டிர அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சிவசேனா கூட்டணி கட்சிகள் உற்சாகமடைய, பாஜக தரப்போ, எப்படி மெஜாரிட்டியை நிரூபிப்பது என்ற கவலையில் ஆழ்ந்தது.இந்த நிலையில, இப்போதாவது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விடுங்கள்; மன்னித்து விடுகிறோம் என்று என்.சி.பி தரப்பில் அஜித் பவாருக்கு அழைப்புகளும் சென்றன. இதையடுத்து பாஜகவை புறந்தள்ளி விட்டு துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவிப்பு வெளியிட்டார். இதனால் இனி வேறு வழியில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பது நடக்காத காரியம் என்ற முடிவுக்கு பாஜகவும் தள்ளப்பட்டது.
துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்த சிறிது நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் பட்னாவிஸ். போதிய பலம் இல்லாததை ஒப்புக் கொண்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பட்னாவிஸ் அறிவித்தார். பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும், பொருந்தாத கூட்டணி அமைத்துள்ள சிவசேனா ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சி ஸ்திரத்தன்மையுடையதாக இருக்காது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதனால் அஜித் பவார் என்ற மண் குதிரையை நம்பி தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியை தக்க வைத்து விடலாம் என பாஜக நம்பியது. ஆனால் அந்தக் குதிரை மண் குதிரையாகி விட்டதுடன், பாஜக முகத்தில் கரி பூசிவிட்டு காலையும் வாரிவிட்டு விட்டு மீண்டும் தேசியவாத காங்கிரஸ் பக்கமே ஓடி விட்டது. இதனால் வேறு வழியின்றி ஆட்சிப் பொறுப்பேற்ற 3 நாட்களில் பதவி விலக வேண்டிய அவலத்துக்கு பாஜக ஆளாகியுள்ளது.
எனவே, மகாராஷ்டிராவில், பாஜகவுக்கு எதிராக தங்கள் கூட்டணி பலத்தை நிரூபித்துக் காட்டிய சிவசேனா – என்.சி.பி.-காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் 33 நாட்களாக அம்மாநில அரசியலில் நீடித்து வந்த குழப்படும் முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது.