திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் இன்று உதயமானது. தென்காசியில் இன்று நடந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியை தலையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி தென்காசி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவ நல்லூர், செங்கோட்டை , தென்காசி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர், சிவகிரி ஆகிய 8 தாதுகாக்கள் அடங்கிய பகுதிகள் தென்காசி மாவட்டத்துக்குள் வருகின்றன.
இந்நிலையில், புதிய மாவட்டப் பிரிவினைக்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், தென்காசி மாவட்ட தொடக்க விழா இன்று காலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்காசி இசக்கி மகால் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.அமைச்சர்கள் பலரும் பங்கேற்ற இந்த விழாவில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.