நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்து வைப்பு?

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெங்களூருவை சேர்ந்த பெற்றோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

அவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ஆட்கொணர்வு மனுவில் கடந்த 2013 ஆம் ஆண்டு தங்களின் 4 பெண் குழந்தைகளை நித்தியானந்தா நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

 

அதன் பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நான்கு குழந்தைகளையும் அகமதாபாத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்திற்கு நிர்வாகம் அனுப்பிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தைகளை பார்க்க அகமதாபாத் ஊருக்கு சென்றபோது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையின் உதவியுடன் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு வந்ததாக தெரிவித்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு தருமாறு பெற்றோர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே பெற்றோரின் புகாரையடுத்து நித்யானந்தா மற்றும் ஆசிரமத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.


Leave a Reply