மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தல் முறையில் அதிரடி மாற்றம்..? அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எனத் தகவல்

உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யாமல், கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக, அவசரச் சட்டம் கொண்டு வர இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

இதில் கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் கட்சி சார்பற்ற முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சார்பிலேயே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா? அல்லது பெரும்பான்மை கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தல் நடத்துவதா? என்பதில் தமிழக அரசு முடிவெடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

ஏனெனில் கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெற்றது. ஆனால் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலமாக மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்ற சட்ட திருத்த மசோதாவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. ஆனால் அப்போது தேர்தலே நடத்தப்படவில்லை.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கடந்த 2018-ம் ஆண்டு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் மீண்டும் மாற்றம் செய்தது. தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டத்திருத்த மசோதாவை, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, 2018-ம் ஆண்டு ஜனவரியில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

 

இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடக்குமா அல்லது மறைமுகத் தேர்தல் வருமா என்பதில் மீண்டும் குழப்பம் நீடித்து வந்த நிலையில் நேரடித் தேர்தல் நடைபெறும் என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தது.ஆனால் தமிழக அரசுத் தரப்பிலோ, இந்த முறை இந்தப் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தாமல், மறைமுகத் தேர்தலே நடத்தவே விரும்புவதாக சமீப நாட்களாக பேச்சு அடிபட்டு வந்தது.

 

இந்த பரபரப்பான கழ் நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக்
கூட்டத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 

மறைமுகத் தேர்தல் நடத்தினால் அதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்றும் தெரிகிறது. ஏனெனில் வெற்றி பெற்ற பிற கட்சி கவுன்சிலர்களை குதிரை பேரம் நடத்தி தம் பக்கம் இழுத்து பெரும்பான்மையான பதவிகளை ஆளும் கட்சித் தரப்பு கைப்பற்றி விடும் என்ற அச்சமே காரணம் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply