தைரியசாலியான தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை நம்ப முடியாது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகப்படுகிறேன் என, சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து அவருடைய தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சென்னை ஐஐடியில் பட்ட மேற்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தவர் கேரள மாணவி பாத்திமா லத்தீப் .இவர் சில நாட்களுக்கு முன்பு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்திமாவின் மர்ம மரணத்திற்கு கல்லூரி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவரின் மிரட்டலே காரணம் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகின்றன. பாத்திமாவின் மரண விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை மாநில குற்றப் புலனாய்வு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் இன்று சென்னை வந்தார். மாலையில் முதலில் போலீஸ் டிஜிபி திரிபாதியையும், பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் அடுத்தடுத்து சந்தித்து, தனது மகள் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு முறையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்துல் லத்தீப், தனது மகள் சாவுக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். பாத்திமா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருவதாக டிஜிபி தெரிவித்ததாகவும், பேராசிரியர் சுதர்சனை கைது செய்ய டிஜிபியிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
லத்தீப் மேலும் கூறுகையில், என் மகள் பாத்திமா எந்த சம்பவம் நடந்தாலும் அதை கடிதமாக எழுதி வைப்பது வழக்கம். அவர் மரணத்துக்கு முன்பும், நடந்த சம்பவம் குறித்து விரிவாக கடிதம் எழுதி வைத்திருப்பார் என்றே நம்புகிறேன். நடந்துள்ள சம்பவத்தை பார்க்கும் போது எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.மேலும் நல்ல அறிவும், திறமையும் படைத்த பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. நல்ல படிப்பாளியான பாத்திமா மிகவும் தைரியசாலியானவர்.
பாத்திமா மரணத்துக்கு ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறிய லத்தீப், தன் மகளுக்கு ஏற்பட்ட கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. இதற்கு காரணமான பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டிஜிபி திரிபாதியைச் சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அப்துல் லத்தீப் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லத்தீப், பாத்திமாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளியை கைது செய்து, உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்ததாக தெரிவித்தார். மேலும் தனது மகள் மர்ம மரணம் தொடர்பாக தமிழக ஆளுநரையும் சந்திக்கப் போவதாக லத்தீப் தெரிவித்துள்ளார்.
தமது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் சந்தேகங்களை எழுப்பியுள்ளதால், பாத்திமா மரண விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.