திருப்பூர், திருமுருகன் பள்ளியில் 3 நாட்கள் நடந்த சாரண – சாரணியர் முகாமில் மாணவர்கள் தனித்திறனை காட்டி அசத்தல்

திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான ட்ரித்திய சோபன் முகாம் என்கிற சாரண – சாரணியர் முகாம் திருப்பூர், நெருப்பெரிச்சல்,  திருமுருகன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் நடந்தது.

 

சாரணியருக்கான  சாரண மாணவிகளின் சாரண கொடியேற்றத்துடன் தொடங்கிய முகாமின் தொடக்க விழாவில்  திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளை சேர்ந்த 195 சாரணியர் களும்,  அதேபோல், திருமுருகன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடந்த  சாரணருக்கான முகாமில் 50 பள்ளிகளை சேர்ந்த 345  சாரணர்கள் என 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமிற்கு  திருமுருகன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாமோகன் தலைமை தாங்கினார். சாரண சாரணிய திருப்பூர் மாவட்ட தலைமையக ஆணையர் ஜான் சாமுவேல், மாவட்ட அமைப்பு ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆணையர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்புரை ஆற்றினார்.

 

முகாமில் சாரண  பயிற்சியாளர் சின்னசாமி, சாரணிய  பயிற்சியாளர்கள் நாச்சியார், அம்புஜம் ஆகியோர் கொண்ட குழுவினர் காலை 6 மணிமுதல் சாரண,சாரணியர்களுக்கு ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங் பயிற்சி, உடற்பயிற்சி மற்றும்  யோகா பயிற்சி ஆகியவற்றை யும், கயிறுகள் மூலம் போடப்படும் பல்வேறு முடிச்சுகளும்,  முதலுதவி செய்தல், திசை பார்க்கும் கருவிகள் கொண்டு திசை அறிதல், உயரம், நீளங்களை அளத்தல், கூடாரங்களை அமைத்தல்  போன்ற பயிற்சிகளை  செயல்விளக்கத்துடன் சொல்லிக்கொடுத்தனர்.

நேற்று மதியம்  நடந்த நிறைவு விழாவில் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தலைமை பண்பு குறித்து தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அதனை எதிர்கொண்டு வெற்றி பெற்று வந்ததையும் விளக்கி பேசினார். மாணவ மாணவிகள் தங்களது தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் பரதம், பாடல், கவிதை, நடனம், யோகா, நாடகம், பலகுரலில் பேசுவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையை காட்டி அசத்தினார்கள். முடிவில் உதவி செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினார்.


Leave a Reply