முதலமைச்சர் விஜயின் கேரளம் பயணம் திடீர் ரத்து!
முதலமைச்சர் விஜய், இன்று கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ திறந்துவைத்துவிட்டு, கேரளம் செல்ல இருந்த நிலையில், தற்போது அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கோவை மாவட்டத்தில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அன்றைய திமுக ஆட்சி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 6.11.2024 அன்று இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில் 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் ஏழு தளங்களுடன் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
இதனை திறந்துவைப்பதற்காக இன்றைய முதலமைச்சர் விஜய் இன்று கோவைக்கு பயணம் மேற்கொண்டு அதனைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேரளம் மாநிலம், திருச்சூரில் பிரபல நகைக்கடை உரிமையாளர் ஏற்பாடு செய்துள்ள நவராத்ரி விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் விஜய், கேரளம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோவையிலும், கேரளம் மாநிலத்திலும் கன மழை பெய்துவருவதால், முதலமைச்சர் விஜயின் கேரளம் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்துவரும் சூழலில், ஹெலிகாப்டரில் பயணிப்பது பாதுகாப்பாக இருக்காது எனும் காரணத்திற்காக இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயின் கேரளம் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





