அமைச்சர் ராஜ்மோகனின் கோட்சூட்..!
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 7 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக பெரியார் அறிவுலகம் நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளத்துடன் ஏழு தளங்களைக் கொண்டு இந்த அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுலக வளாகம் ஏ மற்றும் பி என இரண்டு பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம், அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளி குறித்த அனுபவத்தைப் பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ஸ்பேஸ் லிப்ட் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வரவேற்பறை மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஏழு தளங்களிலும் ஒவ்வொரு பிரிவாக நூலகம் மற்றும் அறிவியல் சார்ந்த வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களும் பொதுமக்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், நூலகத்தை திறந்து வைக்க வந்த முதலமைச்சர் விஜயை அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது அமைச்சர் ராஜ்மோகன் கோட், சூட் எல்லாம் போட்டுக் கொண்டு விஜயை வரவேற்றார். அப்போது விஜய் அவரது கெட்டப்பை சற்று உற்று நோக்கிய படி ராஜ்மோகன் கொடுத்த அன்பளிப்பை வாங்கிக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





