7 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்த தீபக் சாஹர் – வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை வென்றது.

 

வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. இந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நேற்றிரவு நடைபெற்றது.

 

வங்கதேச அணி கேப்டன் மெஹ்முதுல்லா, டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் சேர்த்தது. இந்திய தரப்பில், லோகேஷ் ராகுல் 35 பந்தில் 52 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 62 ரன் எடுத்தனர்.

 

பின்னர் களமிறங்கிய வங்காள தேச அணி, குறுகிய இடைவெளியில் 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிதுன் – நெய்ம் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

 

இதனால், வங்கதேசம் வெற்றி பெறலாம் என்ற சூழல் இருந்தது. எனினும், துபே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். நிலைத்து விளையாடிய நெய்ம், 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் குறைந்த ரன்னில் வெளியேறி, வங்கதேச அணியின் ஆட்டம், 19.2 ஓவரில் 144 ரன்னுக்கு முடிவு பெற காரணமாக இருந்தனர்.

 

இதன்மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில், வங்கதேசத்தை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய தரப்பில் தீபக் சாஹர் வெறும் 7 ரன் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிவம் துபே 3 விக்கெட் கைப்பற்றினார்.


Leave a Reply