காதலனுக்காக கணவரை கொன்று விட்டு காவல்துறை துரத்தியதால் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு காதலனுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் பெண்ணொருவர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லிஜி.இவர் தனது கணவரோடு அங்குள்ள பண்ணை வீடு ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார்.
இந்நிலையில் தனது கணவரை காணவில்லை என கடந்த மாதம் 31ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் லிஜி. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரிஜோசை தேடிவந்தனர். இந்நிலையில் கணவர் கோழிக்கோடு பகுதியில் இருந்து போன் செய்ததாக லிஜி காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
அந்த எண்ணை அடிப்படையாக கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர் காவல்துறையினர். அந்த எண் லிஜி பணியாற்றிவந்த பண்ணை வீட்டின் மேலாளர் வாசிமின் நண்பருடையது என தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தான் வாசிம் என கூறி போன் செய்ததாக கூறியிருக்கிறார்.
இந்த தகவல் வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பண்ணை மேலாளர் வாசிம் பக்கமாக விசாரணையை திருப்பினார் காவல்துறையினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார். அதேவேளையில் லிஜியும் தமது 2 வயது குழந்தையுடன் தலைமறைவாகி இருந்தார்.
வாசிமிற்கும் லிஜிக்கும் இடையே இருந்த தொடர்பு காரணமாக ரிஜோஸ் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் பண்ணை வீட்டில் சோதனை முடுக்கி விட்டனர். மோப்பநாய் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரிஜோஸ் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இருப்பது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நவம்பர் 2-ம் தேதி மாடி இறந்துவிட்டதால் பண்ணை வீட்டில் குழி தோண்ட வேண்டும் எனக்கூறி ஜேசிபி டிரைவரை அழைத்து வந்து அந்த குழியில் மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சடலத்தை
மாடி எனக் கூறி புதைத்துள்ளனர்.
அக்டோபர் 31-ஆம் தேதி கணவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்த நிலையில், நவம்பர் 2ஆம் தேதி தான் சடலம் புதைக்கப்பட்டது. இதனிடையே லிஜி தனது காதலன் வசிமுடன் மும்பையில் தங்கியிருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது.
கேரள காவல்துறையினர் மும்பை வருவதை அறிந்த லிஜி தனது காதலர் வசிம் மற்றும் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். குழந்தை உயிர் இழந்து விட்ட நிலையில் லிஜியும், வசிமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் உடல் நலம் தேறிய பிறகு அவர்களிடமிருந்து விசாரணை நடத்த கேரள போலீசார் திட்டமிட்டுள்ளனர். கணவரை கொன்றுவிட்டு சினிமா பாணியில் தப்பிக்க முயன்று அதன் காரணமாகவே சிக்கியிருக்கிறார் லிஜி.