நண்பனை சுட்டுக்கொன்றது ஏன்? பகீர் வாக்குமூலம்

வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடி கும்பலில் மாணவர் சேர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் அடுத்த வெங்கட மங்கலத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் கடந்த ஐந்தாம் தேதி நண்பர் விஜயகுமாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விஜயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் மறுநாள் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் குப்பைத் தொட்டியில் கிடந்த துப்பாக்கியை புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியன்று துப்பாக்கியை வெளியே எடுத்த நிலையில் தவறுதலாக வெடித்ததில் முகேஷ் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் துப்பாக்கியை கடலில் வீசி விட்டதாகவும் விசாரணையின்போது விஜயகுமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

 

இருப்பினும் விஜயகுமார் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து விஜயகுமாரிடம் மூன்று நாட்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கியை கடலில் வீசியதாக விஜயகுமார் பொய் கூறியதை போலீசார் கண்டறிந்தனர்.

 

இதை தொடர்ந்து நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நண்பரிடம் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
பெருமட்டுநல்லூர் பகுதியை சேர்ந்த ரவுடி செல்வத்தின் குழுவில் முகேஷை சேர வற்புறுத்தியிருக்கிறார் விஜயகுமார். ஆனால் முகேஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் முகேஷை சுட்டுக் கொன்றதாக விஜயகுமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .பெருமாட்டுநல்லூர் செல்வம் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply