இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாலை 5 மணியளவில் விவசாயிகளின் புகாரின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரங்களின் பெயர் , விலை, இருப்பு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் 1.28 லட்சம் எக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் இரண்டு வாரங்கள் நெற்பயிருக்கு உரமிடும் காலம் என்பதால், யூரியா உள்ளிட்ட உரங்களை நவம்பர் மாதத்திற்கான ஒதுக்கீட்டை போதிய இருப்பு வைக்க உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் 250 சில்லரை விற்பனை, 17 மொத்த உர விற்பனை கடைகள், 116 தனியார் உர விற்பனை கடைகள், 134 கூட்டுறவு உர விற்பனை கடைகளில் அக்டோபர் மாதத்திற்கு 4920 மெட்ரிக் டன், நவம்பர் மாதத்திற்கு 6400 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். தற்போது வரை 5986 மெட்ரிக் டன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு கடைகள் மூலம் 1,250 மெட்ரிக் டன் உரம் நாளை விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் தனியார் கடைகள் மூலம் 500 மெட்ரிக் டன் உரம் விற்கவும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேளாண் துறை நிர்ணயித்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கோ, உரிய ஆவணங்கள் இன்றி, உரிய பில் போடாமல் உரங்கள் விற்பதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட உரக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலை விற்பனையை கண்டறிய வேளாண் கூட்டு நடவடிக்கை குழு தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.