கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கு… நீதிபதி பிறப்பித்த உத்தரவு!
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தலைமைச் செயலாளருக்கு எந்த புகாரும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தி தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திருசுலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடந்ததாக தான் கூறவில்லை என்றும் எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தான் கோருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் எந்த வித வெளிப்புற அழுத்தத்திற்கும் ஆட்படாமல் நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் மனுவில் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பெண் மாவட்ட ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்ததுடன் மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் கூறப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, சம்மந்தப்பட்ட ஆட்சியரிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால் அது துரதிஷ்டவசமானது.
ஒரு எம்எல்ஏவின் மாண்பை குலைத்துவிடும். இந்த பிரச்னையில், ஆட்சியர் புகார் கொடுத்தாரா என்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆட்சியரிடம் விசாரித்து தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





