ஆழ்துளை கிணற்றில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரத்தை கண்டுபிடிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என ரோபோட்டிக் வடிவமைப்பாளர் மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி சிறுவன் சுர்ஜித் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குழந்தையை மீட்க போராடியவர்களில் ஒருவரான மணிகண்டன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல மணிநேரம் போராடியும் சிறுவனை மீட்க முடியாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். தான் வடிவமைத்த எந்திரம் மூலம் சங்கரன்கோவிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறிய அவர் சுர்ஜித்தை மீட்க மிக கடுமையாக போராடியும் பலன் அளிக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
தனது ரோபோட்டிக் எந்திரத்தை நவீனப்படுத்த உள்ளதாக கூறிய மணிகண்டன் அனைத்து கண்டுபிடிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து புதிய இயந்திரத்தை கண்டுபிடிக்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.