சுர்ஜித் இறப்பு மன வேதனையை அளிக்கிறது : முதலமைச்சர் இரங்கல்
குழந்தை சுர்ஜித் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என முதல்வர் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார். கடந்த 5 நாட்களாக 80 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்புப்பணி இன்று அதிகாலை 4.40 மணியளவில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தைக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியை தெரிவித்திருக்கிறார்.
அதில் இரவு பகலாக மீட்பு பணி மேற்கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். சுர்ஜித்தின் பெற்றோர், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
குழந்தை சுர்ஜித் தவறி விழுந்து விட்டான் என்ற செய்தி அறிந்தவுடன் அந்த சிறுவனை உயிருடன் மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகிய 3 அமைச்சர்களுக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு சிறுவனை உயிருடன் மீட்பபதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருந்ததாகவும் எடப்பாடிபழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு சிரமங்களைக் கடந்து வல்லுனர்களின் உதவியுடன் குழந்தையை உயிருடன் மீட்க இரவுபகலாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் இருப்பினும் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி தனக்கு ஆழ்ந்த மன வேதனை அளிப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விதிகளை வகுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




