குழந்தை சுர்ஜித் உயிரிழப்புக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டு பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததையடுத்து குழந்தையின் உடல் பாத்திமா புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை கல்லறைத் தோட்டம் சென்ற மு.க ஸ்டாலின் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் சென்றிருந்த திருநாவுக்கரசர், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கே.என் நேரு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுர்ஜித்தின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மு.க ஸ்டாலின் குழந்தை மீட்பதில் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். மண்ணின் தன்மை குறித்து நன்கு அறிந்துள்ள குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டிருக்கவேண்டும் என்றும் குழந்தையை மீட்பதற்கு மாற்று திட்டத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.