ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனையா? இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை நடை பெற்றது. இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த பட்டாசு வியாபாரி அப்துல்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசுகள் விற்பதற்கு தடை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.

 

இந்த நிலையில் இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று கூறி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல், பல இடங்களில் ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனையாகிறது. இதனால் தங்களைப் போன்ற சில்லறை வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர் என்ற கோரிக்கையை வைத்துதான் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணைய தளங்களை முடக்க உத்தரவிட்டார். அத்துடன் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் தண்டனை உறுதி என்பதை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.


Leave a Reply