பிகில்’ ஆனாலும், ‘திகில்’ ஆனாலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை…! அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்… விஜய் ரசிகர்கள் கலக்கம்…!

தீபாவளிக்கு வெளியாகும் பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரும், பி கிலானாலும் சரி, திகிலானாலும் சரி எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என கிண்டலாக கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

 

தளபதி விஜய் படம் என்றாலே, பட ரிலீசுக்கு முன்பும், படம் வெளியான பின்பும் பல்வேறு சர்ச்சைகளும் சுழன்றடிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்த சர்ச்சை கடந்த 2012-ல் துப்பாக்கி படம் வெளியானது முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது .

 

துப்பாக்கி படம் தங்கள் மதத்தை இழிவுபடுத்துவதாக இஸ்லாமியர்கள் கொந்தளித்து போராட்டத்தில் குதித்ததால் சர்ச்சை கிளம்பியது. அடுத்து 2013-ல் வெளியான தலைவா படமும், படத் தலைப்பால் சர்ச்சையை கிளப்பியது. 2014-ல் வெளியான கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் , இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவின் உறவினருடையது என்று கூறி தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு கிளப்பினர். அடுத்து 2017-ல் மெர்சல் , 2018-ல் சர்க்கார் ஆகிய படங்களும் பஞ்சமில்லாமல் சர்ச்சைகளில் சிக்கின.

இந்நிலையில் தான் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் முன்னதாகவே நாளை மறுதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 200 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிகில் படத்தை ரிலீசின் போதே வசூலை அள்ள வேண்டும் என்பதற்காக நள்ளிரவு முதலே சிறப்புக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, புக்கிங்கும் ஜரூராகவே நடந்து முடிந்துள்ளது.

 

ஆனால், இப்போது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது. கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முட்டுக்கட்டை போட்டுள்ளதால் பிகில் படத்துக்கு சிக்கலாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம், பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது, விஜய் பேசிய அரசியல் தான் என்றும் கூறப்படுகிறது . சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பாக பேசிய விஜய், பேனர் அடிச்சவன பிடிப்பிங்க, லாரி டிரைவர பிடிப்பிங்க.. ஆனா பேனர் வச்சவன பிடிக்க மாட்டீங்க என்ற ரீதியில் தமிழக அரசை விமர்சித்திருந்தார். அவரின் இந்தப் பேச்சு அப்போது சர்ச்சையான நிலையில் பிகில் பட ரிலீசுக்கு கட்டாயம் சிக்கல் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இப்போது சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை, கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் நடவடிக்கை என்ற ரீதியில் முட்டுக்கட்டை விழுந்து, விஜய் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகியுள்ளது.

 

இந்நிலையில் பிகில் பட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரும், பிகிலானாலும், திகிலானாலும் எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என்று கிண்டலாக கூறியுள்ளார்.இது விஜய் ரசிகர்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது என்றே கூறலாம்.


Leave a Reply