சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை – மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் எச்சரிக்கை

கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவண்குமார் ஜடாவத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் தொடர்பாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது என தெரிவித்தார். இத்திட்டத்தினால் 24/7 மணி நேரமும் அனைவருக்கும் குடிநீர் விநியோகம் கிடைக்கும் எனவும், முதற்கட்டமாக கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சூயஸ் நிறுவனம் குடிநீர் குழாய் பதிப்பு, பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோக பணிகளை மேற்கொள்ளும் எனவும், குடிநீர் கட்டண நிர்ணயம், குடிநீர் இணைப்பு, துண்டிப்பு ஆகியவை முழுக்க கோவை மாநகராட்சியின் கட்டுபாட்டுக்குள் தான் இருக்கும் என விளக்கமளித்தார்.

 

மேலும்,இத்திட்டத்தில் 25 ஆண்டுகளுக்கும் குடிநீர் கட்டண நிர்ணய உரிமை மாநகராட்சியிடமே இருக்குமென அவர் தெரிவித்தார்.24 மணி நேர குடிநீர் திட்டம் 2008 ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது எனவும், நல்ல திட்டம் என்பதால் அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தினால் பொதுக்குழாய்கள் அகற்றப்படாது எனவும், ஆழ்துளை கிணறு அமைக்கவோ, தண்ணீரை சேமிக்கவோ தடை விதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும்,ஆர்.எஸ்.புரம் பகுதியில் முன்னோட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தினால் குடிநீர் கட்டணம் உயராது எனவும் அவர் தெரிவித்தார்.சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் திட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த அவசியமில்லை எனவும், தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் தமிழக அரசு அரசானை மூலம் வெளியிட்டு சொத்து வரியை உயர்த்தியுள்ளது எனவும் கூறிய அவர், சொத்து வரி குறைப்பு குறித்து அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.


Leave a Reply