சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் அடையாள அட்டைகளை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் சேர்ந்த ஹதர்சன் சிங் நாக்பால் என்பவர் பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 30 ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கும் என்றும், தானும் தனது மகனும் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி., மணிக்குமார், சசிதரன், ரவிச்சந்திர பாபு, கிருபாகரன், டிஎன் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் பார்கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் துணை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் வழக்கறிஞர்கள் அவர்களது உடைகள் வந்தாலும் காவலர்கள் கேட்கும்போது கட்டாயம் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் வாகனங்களும் சோதனைக்கு பின்னரே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.