இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை : காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

இந்தியா மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையில் உள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரின் குற்றச்சாட்டு இது. ஆனால் அப்படி எந்தத் தேக்க நிலையும் இல்லை என்பது மத்திய அரசின் வாதம். இந்நிலையில் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி குறித்த மத்திய அரசின் வாதம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு ஓலா போன்ற நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன. மக்கள் சொந்தமாக கார் வாங்கி மாதத்தவணை கட்டுவதற்குக் பதிலாக இதுபோன்ற வாடகை கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள் என அண்மையில் தெரிவித்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்/ அவரது கருத்து இணையத்தில் வைரல் ஆன நிலையில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மிகக் கடுமையாக அதனை விமர்சித்துள்ளனர்.

நமக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள் அதுதான் நல்ல இடம் என அறிவுரை வழங்கியிருக்கிறார் ராகுல்காந்தி. இதுதொடர்பாக தெரிவித்திருக்கும் அவர் செய்திகளை புதிதாக உருவாக்குவது முட்டாள்தனமான வாதங்கள் போன்றவை இந்தியாவிற்கு இப்போது அவசியமில்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீர்க்கமான திட்டம் தேவை என்று வலியுறுத்தி இருக்கிறார்.

 

பொருளாதார வீழ்ச்சி விவகாரத்தில் மத்திய அரசு குழப்பத்தில் இருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் ஓலா போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தன. இப்போது ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு அந்த நிறுவனங்கள் மீது அரசு குற்றம் சாட்டுகிறது. பொருளாதாரப் பிரச்சினையை பற்றி பாஜக அரசு ஏன் குழப்பி கொள்கிறது என கூறியிருக்கிறார்.

இதனிடையே பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஏ கே அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார் .இந்தப் போராட்டம் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply