3வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை!கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது பில்லூர் அணை. இந்த அணையானது கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்ததால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் மேட்டுப்பாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணை, கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது.அச்சமயம் பவானி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பில்லூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

எனவே,பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் நான்கு மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் தேக்கம்பட்டி,சிறுமுகை,வச்சினம்பாளையம்,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பில்லூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீரால் பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




