திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி வீதியில் ஒரு கட்டிடத்தில் மேல்மாடியில் 4 ஆண்டுகளாக வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 1ம் தேதி வழக்கம்போல் தனது நிறுவனத்திலிருந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு செல்ல புறப்பட்டார் அப்போது பாலமுருகன் நிதி நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து ரோட்டில் நடந்து வந்துள்ளார். காவிரி வீதி பிரிவில் அவர் நடந்து வந்தபோது ஒரு பைக்கில் வந்த 4 பேர் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளளர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, பாலமுருகனை சரமாரியாக வெட்டி விட்டு அந்த 4 பேரும் தப்பினார்கள். தலை, கழுத்து மற்றும் கைகளில் பலமாக வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாலமுருகன் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் கொலையாளிகள் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெரியவந்துள்ளது.
அதை வைத்து விசாரித்தபோது கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பாலமுருகனிடம், ராயபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு கேட்டுள்ளார். அதற்கு விக்னேஸ்வரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் விக்னேஸ்வரன் தான் என்பது அடையாளம் கண்டறியப்பட்டது அவர் மீது ஏற்கனவே திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து கொலையாளிகளை பிடிப்பதற்காக வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு. தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள், உதயகுமார், நந்தகுமார், முத்துமார் ஆகிய 4 பேரும் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள முத்துக்குமாரின் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது இதை அடுத்து அவர்கள் நால்வரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து திருப்பூர் ஜே.எம் 1 நடுவர் நீதிமன்றத்தில், நடுவர் கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்காக கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஓருவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.