பகலில் 100டிகிரி வரையில் இருக்கும் வெப்பம், இரவில் -100 டிகிரியாக இருப்பதுடன், கதிர்வீச்சு அதிகமாகவும், ஆக்சிஜன் குறைவாகவும் இருப்பதால் நிலவில் மனிதர்கள் தங்குவது கடினமானது – நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் பேட்டி
சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கும்போது உலகில் உள்ள அனைவராலும் ஆச்சரியமாக்க பார்க்கப்படும் என்றும், அந்த பகுதியில் பணி இருப்பதாக நம்பப்படுவதாலும், அடுத்த 5 ஆண்டுகளில் நாசாவால் நிலவில் மேற்கொள்ளவுள்ள முயற்சிக்கு இந்தியாவின் சந்திராயன் 2 திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலவின் முக்கியப்பகுதியான தென்துருவ பகுதியில் முதல் முறையாக தரையிறங்கவுள்ள சந்திராயன் 2 திட்டம் நிலவு குறித்த பல தகவல்களை அறிந்துக் கொள்ளவும், எதிர்கால ஆராய்ச்சிக்கும் ஆதரவாக இருக்கும் என்பதால் இந்தியா பெருமை அடைய வேண்டிய தருணம் என்றார்.
தொடர்ந்து பேசியவர், விண்வெளி தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊக்குவிக்கவும் தென்னிந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், நாசாவின் அடுத்தடுத்து திட்டத்திற்கு தயார்ப்படுத்தும் வகையில் இந்த பயணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,அவர் நிலவில் மனிதர்கள் தங்குவது கடினமானது என்றும்,பகலில் 100டிகிரி வரையில் இருக்கும் வெப்பம், இரவில் -100 டிகிரியாக இருப்பதுடன், கதிர்வீச்சு அதிகமாகவும், ஆக்சிஜன் குறைவாகவும் இருப்பதாக அதற்கான காரணங்களை விளக்கினார். நிலவில் ஒரு முகாம் அமைத்து ஆராய்ச்சி மேற்கொள்வது சிறப்பான, சுவாரசியமானது என்றாலும்,வாழ்வது கடினமானது என்ற அவர், 1960 முன்னதாக ‘விண்வெளியை அமைதிக்காக மட்டுமே பயன்படுத்துவோம்’ என்று சர்வதேச நாடுகள் ஒப்பந்தம் இருப்பதால் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான விண்வெளி போர் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே விண்வெளி தளமாக இருக்கும் என்றார்.
மேலும்,விண்வெளி என்ற ஒரு இடம் மட்டுமே நாடுகள் போட்டியிட்டுக்கொள்ளாத இடமாக இருப்பதாகவும், பூமியில் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் சண்டையிடலாம், ஆனால், விண்வெளியில் அந்த நாட்டினவர்கள் நட்பாக இருப்பதாகவும் எடுத்துக்காட்டாக கூறியவர், நிலவு, செவ்வாய் ஆகிய கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அதேபோல், வீனஸ், மெர்குரி ஆகிய கிரகங்கள் மிகவும் வெப்பமாக இருப்பதால் விண்வெளி வீரர்களை தரையிருக்குவதில் சிரமம் இருக்கும் என்றும், சேட்டர்ன், ஜுப்பிட்டர் கிரகங்களில் பணி மற்றும் நீர் கடல் இருப்பதால் அங்கே மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி செய்ய நாசா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,சூர்ய குடும்பம் போன்று பல கிரகங்கள் கொண்ட குடும்பம் நிச்சயமாக இருக்கும் என்றும், அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கலாம் என்றவர், நாம் இன்னும் அதை கண்டுப்பிடிக்கவில்லை தவிர, வருங்காலத்தில் அது கண்டுபிடிக்கப்படும் என்றார்.
ஏலியனில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், 692 முறை பூமியை சுற்றி வந்துள்ளதன் அடிப்படையில் பூமி வட்டமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியவர், Space launch system என்ற மிகப்பெரிய ராக்கெட்டை நாசா உருவாக்கி வருவதாகவும், இன்னும் 3 வருடத்தில் நிலவை சுற்றி வரவும், 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவும் அதன் மூலம் திட்டமிட்டுள்ளதுடன், அந்த நிலவின் பயணத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என்ற அடிப்படையில் இருவர் அனுப்பப்பட உள்ளதாகவும், அதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அனுப்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு தற்போது நாசவிடம் நிதி இல்லை என்றும்,செவ்வாய் திட்டம் என்பது மிகவும் விலை உயர்ந்தது என்றாலும், அதுவே நாசாவின் லட்சியம் என்றவர், நாடுகளின் கூட்டு முயற்சியால் செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவது சாத்தியமாகும் என்றும், அதுவே மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படும் என்றார்.

மேலும்,விண்வெளியில் பழைய ராக்கெட்கள், செயற்கைக்கோள்கள் குப்பைகளாக இருப்பதை ‘ஜுங்க்ஸ்’ என விண்வெளி மொழியில் குறிப்பிடுவதாகவும், ஒரு ராக்கெட் வெடித்தால் 1000 துண்டுகளாக விண்வெளியில் சிதறி மிதந்து கொண்டிருக்கும் என்று ஒரு சிறிய எடுத்துக்காட்டாக விண்வெளி தொடர்பான குப்பைக்கு உதாரணம் கூறியவர், சர்வதேச நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் விண்வெளியில் ஏற்படும் குப்பைகளை குறைக்க வழிவகுக்கும் என்றார்.
பூமியின் மேல் பகுதி என்பது பேப்பரை விட ரொம்ப மெல்லியதாக இருக்கும் என்றும், ஒவ்வொரு விண்வெளி வீரரும் விண்வெளியிலிருந்து பூமிக்கு வரும்போது, பூமியை எவ்வளவு பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார் என்றவர், 25 ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் தான் பூமியை சுற்றியபோது, மரங்களை வெட்டி வனத்தை எரிப்பதனால் தென் அமெரிக்கா கண்டம் முழுமையாக பெரிய புகை மண்டலம் உருவானதை பார்க்க முடிந்ததாகவும், இப்போது இல்லை, பல காலமாகவே வனத்தை அழிப்பது, மரங்களை வெட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
மனிதன் வாழக்கூடிய ஒரே இடம் பூமி என்பதால், அனைத்து நாடுகளுக்கும் பூமியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளதாக வலியுறுத்தியவர், அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், அது வெற்றியை தரும் என்பதை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உணர்த்துவதாகவும் ,அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா எந்த நாட்டுடனும் பணியாற்றுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, கோவை கணியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் தனது விண்வெளி வாழ்க்கை, பயணம், கடந்து வந்த சவால்கள் என பல வகையில் விண்வெளி தொடர்பான பல கருத்துக்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.
மேலும், விண்வெளியில் தான் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய விளக்கத்தை இயல்பாக அளித்தது மாணவர்களுக்கு உற்சாகத்துடன், விண்வெளி துறை தொடர்பான ஊக்கத்தையும், பங்கேற்பையும் அளித்தது.பின்னர், விண்வெளி தொடர்பான மாணவர்களின் சந்தேகத்தையும் தெளிவாக்கினார். இதற்கிடையே, விழாவை நடத்திய கல்லூரியின் முதன்மை செயல் அலுவலரான அனுஷ்யாவிற்கு நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய துண்டை பரிசாக அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




