மதுரை அருகே செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவன் காவல்துறை தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் மதுரை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடி வந்தனர். ஆனால் காவல்துறையின் கைகளில் சிக்காமல் புத்திசாலித்தனமாக தப்பித்து வந்துள்ளார். இந்த நிலையில் காவல்துறையின் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
காவல்துறையால் தேடப்படும் விஜயகாந்த் தேர்வு எழுதிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு போலீஸ் ஆகிவிடலாம் என்ற கனவில். தேர்வை எழுதி விட்டு வெளியே வந்த விஜயகாந்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு .குற்றசெயல்களில் ஈடுபட்ட இளைஞர் போலீசாக வேண்டும் என்று தேர்வு எழுதியபோது காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.