மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டி.ஏ) 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டி.ஏ) 3 சதவீதம் உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை (டி.ஆர்) அதற்கேற்ப உயர்த்தவும் மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த உயர்வினால் அகவிலைப்படி (டி.ஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டி.ஆர்) விகிதம் அடிப்படைச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் முறையே 60% இருந்து 63% ஆக அதிகரிக்கும். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
6-வது மத்திய ஊதியக் குழுவின் சம்பள விகிதத்தின் கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 2026 ஜூலை 1 முதல் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு, அடிப்படைச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 262 சதவீதத்தில் இருந்து 269 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5-வது மத்திய ஊதியக் குழுவின் சம்பள விகிதத்தின் கீழ் வருபவர்களுக்கு, அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 2026 ஜூலை 1 முதல் 14 சதவீதம் உயர்த்தப்பட்டு, அடிப்படைச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 483 சதவீதத்தில் இருந்து 497 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண உயர்வின் மூலம் அரசுப் கருவூலத்திற்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.10,016 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.
அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (AICPI) பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படியை அறிவிக்கிறது. இதற்கு முந்தைய அகவிலைப்படி உயர்வு 2026 ஏப்ரல் 18 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது; அப்போது மத்திய அமைச்சரவை 2% உயர்வை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




