--- --:--:-- --

இளைஞர்களுக்கு இலவச ஆர்.ஜே. பயிற்சி.!

2

வானொலி துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், இளைஞர்களுக்கு இலவசமாக ஆர்.ஜே. பயிற்சி, சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகள் மூலம் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நூல்களாகத் தொகுத்தல் எனப் பல்வேறு தளங்களில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வருகிறார் ரத்தினவாணி சமுதாய வானொலி நிலைய இயக்குநர் மகேந்திரன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஊடகப் பணி மற்றும் இலக்கியத் தொண்டு என இரு தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

 

 

வானொலி துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதுடன், இலக்கிய முயற்சிகள் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இதுகுறித்து மகேந்திரன் கூறியதாவது, “எனது வானொலிப் பயணம் அகில இந்திய வானொலியின் கொடைக்கானல் நிலையத்தில் தொடங்கியது. அங்கு சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். அதன்பிறகு, திருநெல்வேலி ஹலோ எஃப்.எம். பண்பலை வானொலியில் 15 ஆண்டுகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றினேன்.

 

 

அப்போது நான் தயாரித்த ‘அஞ்சறைப் பெட்டி’, ‘சில்லுனு ஒரு காலை’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நேயர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, வெளிநாடுகளில் உள்ள இரண்டு வானொலி நிலையங்களை வழிநடத்தும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது ரத்தினவாணி சமுதாய வானொலியின் நிலைய இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். வானொலி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம். அந்த நோக்கத்தில், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப்படும் ஆர்.ஜே. பணிக்குத் தேவையான பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறேன்.

 

 

நிகழ்ச்சிகளை எவ்வாறு தொகுப்பது, வானொலியில் பணியாற்றுவதற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பது குறித்து இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற பலர் தற்போது ஊடகத் துறையில் பணியாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

 

சிறுவயது முதலே எனக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தின் காரணமாக, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளையும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையுடன் இணைந்து ‘இந்திய முகங்கள்’ என்ற தலைப்பில், இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த ஆளுமைகள் குறித்த கருத்தரங்கை நடத்தினோம். உலகம் முழுவதிலுமிருந்து 5,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் 15 தொகுதிகளாக நூல்களாக வெளியிடப்பட்டன. இந்த முயற்சிக்கு ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது.

 

அதேபோல், தென்காசி ஜே.பி. கல்விக் குழுமத்துடன் இணைந்து ‘இந்திய இளைய முகங்கள்’ என்ற தலைப்பில் மற்றொரு முயற்சியை மேற்கொண்டோம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, நாட்டுக்குப் பெருமை சேர்த்த இளைஞர்களின் சாதனைகளை ஆவணப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த முயற்சியின் மூலம் 1,700-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டன. இளைஞர்களின் சாதனைகள் பலருக்கும் தெரிய வேண்டும் என்பதுடன், அவர்களின் பங்களிப்புகள் எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயன்படும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டோம்.

 

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கல்லூரியுடன் இணைந்து ‘பார்போற்றும் பாவையர்’ என்ற தலைப்பில் பெண்களின் பெருமைகளையும் சாதனைகளையும் எடுத்துரைக்கும் இலக்கிய முயற்சியையும் ஒருங்கிணைத்தோம். இந்த முயற்சியில் 7,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 ஆய்வுக் கட்டுரைகள் 30 தொகுதிகளாக நூல்களாக வெளியிடப்பட்டன. இந்தப் பணிக்கும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது. இதன் மூலம் பெண்களின் சாதனைகளையும் சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்புகளையும் பரவலாக எடுத்துச் செல்ல முடிந்தது.

 

இந்த இலக்கியப் பணிகளில் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அனைவரின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும்தான் இத்தகைய பெரிய முயற்சிகளைச் சாத்தியமாக்குகின்றன. இதனுடன், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு நூல்களை எழுதி எனது தமிழ்ப் பணியைத் தொடர்ந்து வருகிறேன். வானொலி துறையில் நான் பெற்ற அனுபவத்தையும் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். குறிப்பாக, இளைஞர்களுக்கு வழிகாட்டுவதும் சாதனையாளர்களின் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவதும் எனது பணியின் முக்கிய நோக்கங்களாக உள்ளன” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon