நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வாகக் கூடாது என ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில் சோனியா காந்தியே மீண்டும் இடைக்காலத் தலைவராக தேர்வானது எப்படி என்ற கேள்வி எழுந்தது.
சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் கட்சியின் வளர்ச்சிக்காகவும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றார். இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இதை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் விடாபிடியாக ராஜினாமா செய்துவிட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நேரு குடும்பத்தை அல்லாத ஒரு தலைவரை தேர்வு செய்யுங்கள் என ராகுல் காந்தி மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த கூட்டத்தில் கூட காங்கிரஸ் தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் இதில் காலதாமதம் கூடாது என்றும் சோனியா காந்தி அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனை நடத்தினர். ஏற்கெனவே தலைவர்களாக இருந்தவர்கள் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் இருக்கக் கூடாது என்பதால் சோனியாவும் ராகுலும் கிளம்பிவிட்டனர்.
எனினும் அந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இதையடுத்து நேற்று இரவு மீண்டும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நடைபெற்றது. இதில் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக தேர்வு செய்துவிட்டனர்.
முகுல் வாஸ்னிக், ஜோதிர்ராதித்ய சிந்தியா, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. எனினும் அவர்களை தலைவராக ஏற்க மொத்த நிர்வாகிகளில் ஒரு சதவீதம் பேர்தான் ஒப்புதல் அளித்தனர். இதன் பின்னர்தான் சோனியாவை ஒப்புக் கொள்ள வைத்து அவரை இடைக்கால தலைவராக அறிவித்தனர்.