தபால் வாக்குகளுக்கு மின்னணு முறை : 5 லட்சம் பேர் கூடுதலாக வாக்குப்பதிவு

தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் நடவடிக்கையால் மக்களவைத் தேர்தலின்போது 5 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நடந்த தேர்தல் பணியின்போது ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், காவல் துறையினர் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.

 

அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட காரணத்தால் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று நேரில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக தனியாக ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தின் வழியாக இந்தியா முழுவதும் இருந்து தங்களை வாக்காளர்களாக 18 லட்சத்து 2 ஆயிரத்து 646 பேர் பதிவு செய்திருந்தனர்.

 

அவர்களுக்கு மின்னணு முறையில் தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன. முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையால் காலமும், செலவும் குறைந்தது. இந்த நடைமுறையானது இரண்டு நிலைகளில் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. தனிநபருக்கான கடவுச்சொல் மற்றும் அடையாள எண் ஆகியவற்றின் மூலமாக மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளில் ரகசியம் காக்கப்பட்டது.

இந்த முறையின் மூலமாக தொகுதிக்கு வெளியில் எங்கே இருந்தாலும் மின்னணு முறையில் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளைப் பதிவு செய்தனர். அதனால் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாக்காளர்கள், வாக்குரிமையை இழக்கும் வாய்ப்பு குறைந்தது. கடந்த 2014}இல் நடந்த மக்களவைத் தேர்தலில் 13 லட்சத்து 27 ஆயிரத்து 627 வாக்காளர்கள் தபால் வாக்கு மூலமாக தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

 

ஆனால், மின்னணு முறை இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதால் 18 லட்சத்து 2 ஆயிரத்து 646 பேர் இணையதளத்தில் பெயர்களைப் பதிவு செய்து தபால் வாக்குகளைப் பெற்று வாக்களித்தனர். இது கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது சுமார் 5 லட்சம் அளவுக்கு அதிகமாகும் என்று தனது செய்தியில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


Leave a Reply