பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமானபில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோவை,திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமாக விளங்கி வரும் பில்லூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியாக உள்ளது.

இன்று அதிகாலை 04.15 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 97 அடி.இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் நான்கு மதகுகளின் வழியாக திறக்கப்பட உள்ளது.

 

இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேக்கம்பட்டி,நெல்லித்துறை,சிறுமுகை,வச்சினம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் ஆற்றை கடக்கவோ,ஆற்றில் இறங்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் கூறுகையில் பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோரப்பகுதி மக்களுக்கு அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர் மூலம் எச்சரிக்கையும்,தண்டோரா போட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும்,தீயணைப்புத்துறையினர்,அவசர கால மருத்துவ பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்,ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ கூடாது எனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply