சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் 44 வாரங்கள் பயிற்சி பெற்ற 29 வீரர்களை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சி மையத்தில் எல்லை பாதுகாப்புப் படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்து பல்வேறு மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 467-ஆவது பிரிவில் கடந்த 44 வாரங்களாக பயிற்சி மேற்கொண்ட 29 வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பயிற்சி மையத்தின் காவல் துணைத் தலைவர் (டிஐஜி) ரண்வீர் சிங் தலைமை வகித்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், பயிற்சியில் சிறந்து விளங்கிய பல்வந்த்சிங் சரோஜி, அனுகம்பா எகா, மான்பிரிட் கபூர், ஜெகதீஷ் ஆகிய வீரர்களை பாராட்டி கோப்பைகளை வழங்கினார். விழாவில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, நாட்டின் தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தற்போது பயிற்சி நிறைவு செய்துள்ள 10 பெண் வீரர்கள் உள்பட 29 வீரர்களும் அருணாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரம், ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, பிகார், பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.