விவசாய சங்கத்தினர் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
கோவையில் இந்தியன் வங்கி முன்பாக சேலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அச்சம்பவத்தை கண்டித்து விவசாய அமைப்பினர் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற விவசாயி கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் தனது விவசாய நிலத்தை அடகு வைத்து தொழில் கடன் பெற்ற நிலையில் கடனை திருப்பி செலுத்த தயாராக இருந்தும் வங்கி நிர்வாகம் அவரது விவசாய நில பத்திரங்களை தர மறுத்ததால் வங்கி முன்பாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்தும் விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நாராயணசாமி விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய கடனுக்காக வங்கிகள் விவசாயிகளிடம் கடும் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும் அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும்,விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள் விவசாயி தற்கொலைக்கு காரணமான வங்கி மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் விவசாயிகளைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




