முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதா மீது இன்று முழுவதும் விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி., தெலுங்கு தேசம், அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றபட்டுள்ள நிலையில், இனி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் மசோதா சட்டமாக மாறும்.
இந்நிலையில், வாக்கெடுப்பில் அதிமுக வெளிநடப்பு செய்ததை கனிமொழி விமர்சித்துள்ளார். கனிமொழி தன்னுடைய ட்விட்டரில், ‘முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது’ என குறிப்பிட்டுள்ளார்.