பேராசிரியை நிர்மலாதேவி திருநெல்வலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைதுசெய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் அண்மையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
விசாரணைக்காக கடந்த 8-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு தாமதமாக ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, அங்கிருந்து புறப்பட மறுத்து பல இடங்களில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, அன்று இரவு அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தர்காவுக்குள் நுழைந்து தனக்கு நபிகள் நாயகம் ஆசீர்வாதம் செய்துள்ளதாகக் கூறி அழுது புலம்பினார்.
போலீஸாரால் அங்கிருந்து அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டு ஆத்திப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விடப்பட்டார்.அதன்பின் தனது கணவர் சரவணபாண்டியனின் வழக்கறிஞரான ஜோபு ராஜ்குமாரை அலைபேசியில் தொடர்புகொண்டு தனது தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும், தனக்கு மனநல சிகிச்சை வேண்டும் என்றும் கூறினார். இந்த ஆடியோ வைரலாகப் பரவியது.
தனது உறவினர் உதவியுடன் பேராசிரியை நிர்மலாதேவி திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக உளவியல் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க ரத்த சம்பந்தப்பட்ட நபரின் கையெழுத்து அவசியம். ஆனால், பேராசிரியை நிர்மலாதேவிக்காக யாரும் கையெழுத்திட வரவில்லை என்பதால் புறநோயாளிகள் போல பதிவு செய்யப்பட்டு அவருக்குத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது நிலையைக் கொஞ்சம், கொஞ்சமாக பேராசிரியை நிர்மலாதேவி உணர்ந்து வருவதாகவும், பேராசிரியை நிர்மலாதேவிக்கு அவரது குடும்பத்தினர் ஆதரவுக்கரம் நீட்டி வருவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஆகஸ்ட் 5-ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வரும் பேராசிரியை நிர்மலாதேவியிடம் நல்ல மாற்றங்களைக் காண முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.