கோவை துடியலூர் அருகே பூட்டியிருந்த ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் இருந்து 167 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பிரிவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்.கோவை காந்திபுரம் பகுதியில் ஸ்டுடியோ தொழில் செய்துவரும் அவர் நேற்று பிற்பகல் தனது மனைவி மற்றும் மகள்களுடன் விடுமுறையை கழிக்க வெளியே சென்றுள்ளார்.
பின்னர், மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு வழக்கமாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளே சென்றுள்ளனர். அப்போது,படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 167 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்பக்க கதவை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரிய வரவே உடனடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துடியலூர் காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துடியலூர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 167 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.