தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.கோவை மாவட்ட பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநாடு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு வணிகர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.சீனப்பட்டாசுகளை விற்பனை செய்ய மாட்டோம் என பட்டாசு விற்பனையாளர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் இருப்பினும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக சில வியாபாரிகள் சீனப்பட்டாசுகளை வாங்கி ஏமாறுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும்,தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பட்டாசு கடை அமைத்து விறபனை செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனுமதி வழங்க வேண்டும் என்றும் பட்டாசு விற்பனை உரிமம பெற ஐந்து துறைகளை அணுக வேண்டி உள்ளதால் உரிமம் பெறுவதற்கு ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை ஆறு மணி நேரத்திற்குள் காற்றுடன் கலந்து விடும் என நாசா கூறியுள்ள நிலையில் அமெரிக்கா,சீனா போன்ற நாடுகளில் அதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனவும்,இந்தியாவில் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்ப்பதாகவும் எனவே இக்கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ஏற்கனவே வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் அதில் தங்களையும் வாதியாக சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.