ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஓர் ஆண்டில் நடமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு குரல்களும், எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே அட்டை இந்த வரிசையில் மத்திய அரசு அறிவித்துள்ள அடுத்த திட்டம் தான் ஒரே நாடு, ஒரே ரேஷன். இந்த திட்டத்தின் நோக்கம் நாடு முழுவதும் உள்ள மக்கள் குறிப்பிட்ட ஒரு கடை என்று இல்லாமல் மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் அந்த மாதத்திற்கான பொருட்களை வாங்க முடியும்.

 

இந்த திட்டத்தை 81 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் ஓராண்டிற்குள் முறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக புலம் பெயர்ந்து வேறு மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்ல மாநிலத்திற்குள்ளேயே வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்களும் இந்த திட்டம் மூலம் அதிகம் பயன்பெறுவார்கள். இந்த நடைமுறையானது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, திரிபுரா, ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் மாநில அளவில் செயல்பாட்டில் உள்ளது.

 

இதனை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக மாநில அளவில் அனைத்து ரேஷன் கடைகளை ஒன்றிணைக்க மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதற்கான காரணங்களாக அவர்கள் முன் வைப்பது மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்பது பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், உதாரணமாக தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலத்தில் வேறு மாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகிறார்கள்.

 

ஒரே நாடு, ஒரே ரேஷன் செயல்பாட்டிற்கு வந்தால் வெளி மாநிலத்தவருக்கும், தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவார்கள். இதனால் தமிழகத்திற்கு ரேஷன் பொருட்கள் முழுமையாக சென்று சேராத நிலை ஏற்படுவதோடு , தமிழகத்திற்கு நிதி பற்றாக்குறையும் உண்டாகும். தமிழகம் போல மற்ற மாநிலங்களில் ரேஷன் முறை வலுவாக இல்லாத காரணத்தினால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் இதன் மூலம் நன்மை ஏற்பட போவதில்லை என்கின்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. இது தவிர தமிழகத்தின் ரேஷன் கடைகளில் அரிசி பிரதான பொருளாக உள்ளது.

 

ஆனால் பஞ்சாபில் கோதுமை பிரதான பொருளாக உள்ளது. தமிழகத்தில் பாமாயில் வழங்கப்படுவது போல மேற்கு வங்கத்தில் கடுகு எண்ணெய் விற்பனை செய்யபடுகின்றன. மாறுபட்ட பொருட்களுக்கு ஏற்ப நிதி பகிர்வு இருக்குமா என்ற கேள்வியும் உள்ளது. ஒரே நாடு, ஒரே அட்டை என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஆதார் அட்டையை அமல்படுத்துவத்திலேயே பல குளறுபடிகள் இருந்தன. அவ்வாறு மக்களுக்கு எந்த சுமையும் ஏற்படுத்தாமல் குளறுபடிகள் இல்லாமல் இந்த திட்டம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப்படுகிறது.


Leave a Reply