அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு வந்தோருக்கு நிகழ்ந்த விபரீதம்! 2 வயது குழந்தை பரிதாபம்

தந்தையின் கழுத்தை அணைத்தபடி இருக்கும் சிறு குழந்தை. குழந்தையை தனது டி ஷர்ட்டுடன் அணைத்தபடியே இருக்கும் இளம் தந்தை. இருவரின் முகங்களும் நதி நீரில் மூழ்கிய நிலையில் இருக்கும் புகைப்படம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் தனது 2 வயது மகளுடன் சேர்ந்து இறந்த நிலையில் காணப்படும் புகைப்படம் அமெரிக்காவில் நுழைய முயலும் குடியேறிகள் மற்றும் அகதிகளின் நிலைக்கு உதாரணமாக பேசப்படுகிறது.

 

வறுமைக்கும் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் பயந்து தனது மகளுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கி தரும் கனவுடன் மத்திய அமெரிக்க நாட்டிலிருந்து ஆஸ்கர் தனது மனைவியுடன் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா வந்தார். அங்கு தஞ்சம் கேட்டு விண்ணப்பித்து காத்திருந்த இந்த குடும்பம் குடியேறுவதற்கான கெடு பிடிகளால் அந்நாட்டில் நுழைய முடியாமல் காத்திருந்தது.

 

அதற்கான எந்த நம்பிக்கையும் ஏற்படாத நிலையில் ஆஸ்கர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமெரிக்கா மெக்ஸிகோ இடையிலான நதி வழியே நீந்திய படியே அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றுள்ளார். இந்த முயற்சியில் ஆஸ்கரும், அவரது 2 வயது குழந்தையும் உயிர் இழந்தனர். அவரது மனைவி மட்டும் தப்பி பிழைத்தார்.

 

2015 இல் சிரியா நாட்டு அகதி குழந்தை உயிரிழந்து கிடந்த புகைப்படம் உலகை உலுக்கிய நிலையில் தற்போது அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று தோற்று போய் உயிரிழந்த இந்த தந்தை மகள் புகைப்படம் உலகையே உலுக்கியிருக்கிறது. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து தனது எல்லையில் 400 மைல் தூரத்திற்கு சுவர் எழுப்பும் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

 

அமெரிக்காவில் தஞ்சம் கேட்பவர்கள் நாளொன்றுக்கு குறைந்த எண்ணிக்கை அளவிலேயே விண்ணப்பிக்க முடியும். இப்படி விண்ணப்பித்து காத்திருந்தும் தஞ்சம் கிடைக்காதனாலேயே ஆஸ்கர் தனது குடும்பத்துடன் நதி வழியே பயணம் மேற்கொண்டு உயிர் இழந்துள்ளார். உயிரிழந்த தந்தைமகளுக்கு அமெரிக்கர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

 

இந்த சம்பவம் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில் எதிர்க்கட்சியான ஜனநாயககட்சி தான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். குடியேறிகள் குறித்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் இது போன்ற துயரங்களை நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.


Leave a Reply