இரண்டாம் உலக போருக்கு பிறகு இந்தியா ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள அவர் ஒசாகா நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது தான் 2014 இல் இந்திய பிரதமரான பிறகு ஜப்பான் உடனான நட்பை மேம்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டாயதாக கூறினார்.
தலைநகரங்கள் மற்றும் தூதர்களை தாண்டி ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேவும் தானும் இரு நாடுகள் இடையிலான ராஜாங்க உறவை பொது மக்களிடம் கொண்டு சேர்த்து இருப்பதாக மோடி தெரிவித்தார்.சுவாமி விவேகானந்தர், ரவீந்திர நாத் தாகூர் மற்றும் மகாத்மா காந்தி அடிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆளுமை நிறைந்த தலைவர்கள் எல்லாம் ஜப்பான் உடனான உறவை மேம்படுத்தி வந்திருப்பதாக மோடி குறிப்பிட்டார்.
ஜப்பானுக்கும், இந்தியாவிற்கும் இடையேயான உறவு இன்று நேற்று வந்தது அல்ல. பல நூற்றாண்டுகளை கடந்தது என்றும் பிரதமர் தெரிவித்தார். 7 மாதங்களுக்கு முன்னர் தான் ஜப்பான் வந்திருந்த போது ஜப்பான் மக்கள் சின்ஸோ அபேவிற்கு மீண்டும் வெற்றியை தந்துள்ளதாக மோடி தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் ஒருபிரதமர் சேவகனாக நாட்டு மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்து வெற்றியை தந்து இருப்பதாக பெருமிதத்துடன் மோடி கூறியிருக்கிறார். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து புல்லட் ரயில் தயாரிக்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.