நாடு முழுவதும் 222 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனை… பிரதமர் மோடி

Publish by: --- Photo :


நாடு முழுவதும் 222 மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்து கொன்ற சம்பவம் தனக்கு வேதனையை தருவதாக கூறினார்.

 

தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதல் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். நாடு முழுவதும் 222 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் அதனை சரி செய்ய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் எம்‌பிக்களின் நிதியை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார். மத்திய நீர் சக்தி அமைச்சகம் அமைச்சகம் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தும் என்று மோடி குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்ச கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்பதே தமது கனவு என்றும், அதனை நிறைவேற்ற எதிர் கட்சியினரும் கரம் கோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேர்தலில் தோல்வி அடைந்தால் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு என்று கூறி அதன் பின்னால் சென்று எதிர் கட்சிகள் ஒழிந்து கொள்கின்றனர் என்று பிரதமர் சாடினார்.

 

தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்காமல், கேள்விக்கு உள்ளாக்குவாதன் மூலம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்திய வாக்காளர்களை அவமதிக்கிறது என்றும் பிரதமர் குற்றம் சாட்டினார். பீகாரில் மூளைகாய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் துர்திர்ஷ்டவசமானவை என்றும் , இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் அவமானமாக கருத வேண்டிய விஷயம் இது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.