முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதிக்கு ” சீல் “.

கோவை நவ இந்தியா பகுதியில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி உத்தரவின் பேரில் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முறையான அனுமதியின்றி தனியார் விடுதியில் மது,போதை மாத்திரைகள் பயன்படுத்தியதாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து உரிய அனுமதியின்றி செயல்பட்ட தனியார் விடுதி மூடி சீல் வைக்கப்பட்டது.

 

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் சொகுசு விடுதிகள்,ஹோட்டல்கள் என அனைத்தும் முறையான அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் எனவும்,மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்த நிலையில் கோவை நவ இந்தியா அருகில் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் முறையான அனுமதியின்றி விடுதியினை நடத்தி வருவதாகவும்,விடுதிக்கு வருவோர் மற்றும் தங்குவோர்களால் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி மக்களுக்கு இடையூறு தருவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளன.

 

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் படி கோவை தெற்கு வட்டாட்சியர் தேவநாதன்,மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி ஆகியோர் காவல் துறையினரின் உதவியுடன் கள ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

 

விசாரணையில் குறிப்பிட்ட தனியார் விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் தேவநாதன் தலைமையில் கதவை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்து தனியார் விடுதியை மூடி சீல் வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply