செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் இணைந்து சுற்றுப் பயணம் செய்து குடிநீர் தட்டுபாடு குறித்து ஆய்வு !!

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவைய பூர்த்தி செய்ய உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொண்ட குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.காவனூரில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகப் பணி, தெற்குத்தரவை ஊராட்சி வைரவன்கோவில் கிராமத்தில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிணறு உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

 

கிராம மக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பின், மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் வறட்சி காரணமாக பாதிக்காத வகையில் சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள் உட்பட 2,306 குக்கிராமங்கள் உள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் தினமும் சராசரியாக 79.4மில்லியன்லிட்டர் குடிநீர் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக 35 மில்லியன் லிட்டர்,உள்ளாட்சித் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் போன்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் சராசரியாக 38 மில்லியன் லிட்டர் அளவில், மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

 

மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் சாயல்குடி பேரூராட்சி தவிரஎஞ்சிய 6 பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. சாயல்குடி பேரூராட்சியில் 1 நாள் இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.ஊரகப் பகுதிகளில் 1,295 குக்கிராமங்களுக்கு தினமும், 788 குக்கிராமங்களுக்கு 1 நாள் இடைவெளி, 223 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.13.82 கோடி மதிப்பில் 377 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் வழங்க இயலாத கிராமங்கள், உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த இயலாத கிராமங்கள் என்ற அடிப்படையில் 45 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் டேங்கர் லாரிகளில்குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

குடிநீர் விநியோகம் தொடர்பாக 1800 425 7040 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் இதுவரை 82 புகார்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மண்டல அளவில் துணை ஆட்சியர், உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக குடிநீர் விநியோகம் தொடர்பாக பெறப்படும் புகார்கள், தகவல் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக விளையாட்டு திடல் மர நிழலில் கோ கோ விளையாடிய மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

 

உங்களுக்கு என்னென்ன விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது என கேட்டார். செஸ், கேரம் என பதிலளித்த மாணவ, மாணவியரிடம் செஸ் யாருக்கு விளையாடத் தெரியும் என கேட்டார். அனைவருக்கும் தெரியும் என கையை உயர்த்திய மாணவர்களை ஆட்சியர் பாராட்டினார். எட்டாம் வகுப்பு மாணவர் ஜீவா உடன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒரு செட் செஸ் விளையாடினார். தன்னுடன் முழு ஈடுபாடுடன் விளையாடி திறமையை வெளிப்படுத்திய மாணவர் ஜீவாவை ஆட்சியர் பாராட்டினார். இதை தொடர்ந்து தெற்குத் தரவை ஊராட்சி அம்மன் கோவில், வைரவன் கோயில் பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கிராம சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்திருந்த வைரவன் கோவில் கிராம மக்களை ஆட்சியர் பாராட்டினார். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சாலை விரிவாக்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ராமமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய காவிரி குடிநீர் திட்ட நிர்வாக உதவி பொறியாளர் ஜவகர் கென்னடி, உதவி பொறியாளர் ஹேமா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடன்.ஊராட்சி செயலர்கள் பூவேந்திரன்,விமல்ராஜ், உடனிருந்தனர்.


Leave a Reply