அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உயர் அதிகாரி மீது புகார்

கள்ளக்குறிச்சி அருகே உயர் அதிகாரி கொடுத்த தொந்தரவால் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பெண் உதவி மின் பொறியாளர் ஒருவர் முதலைமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணி புரியும் சிந்து பைரவி என்பவர் கடந்த 13 ஆம் தேதியன்று அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்.

 

உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது குறை ரத்த அழுத்தத்தை சமன் செய்யும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்ட போதிலும் சிந்து பைரவியின் உயிருக்கு 70 மணி நேரம் கெடு விதிக்கப்படவே கச்சிராபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 

சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்த அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் உயர் அதிகாரி கொடுத்த பணி தொந்தரவு காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக குற்றம் சாட்டினார். உயர் அதிகாரியான அவர் தன்னை லஞ்சம் வாங்க தூண்டுவதாகவும், கோப்பில் எந்த இடத்தில் கையெழுத்து கேட்டாலும் உடனே போட்டு தர வேண்டும் என வற்புறுத்தி தகாத வார்த்தைகளில் பேசி வந்ததாகவும் புகார் கூறினார்.

 

ஏற்கனவே குறை ரத்த அழுத்ததால் பாதிக்கபட்ட இவருக்கு உயர் அதிகாரி தொடர் தொல்லை கொடுக்கவே தற்கொலை முடிவை எடுத்ததாகவும் அவர் வேதனை தெரிவித்தார். உயர் அதிகாரி மீது போலீசில் புகார் அளித்தும் அவர்கள் புகாரை திசை திருப்ப பார்ப்பதாக சிந்து பைரவியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்த நிலையில் தற்போது உதவி மின் பொறியாளர் சிந்து பைரவி தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்யும் உயர் அதிகாரியின் கீழ் பணி புரிய முடியாது என கூறி முதலமைச்சர், மின் துறை அமைச்சர், தலைமை பொறியாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

மேலும் தனக்கு தொந்தரவு செய்யும் அதிகாரி அரசியல் பலம் மிக்கவராக இருப்பதாலும், அவருடன் பணி செய்தால் அவருடைய உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் மனு அனுப்பியுள்ளார். இதனிடையே சிந்து பைரவியின் புகார் தொடர்பாக விளக்கம் கேட்க முயன்ற போது விளக்கம் அளிக்க அந்த உயர் அதிகாரி மறுத்துவிட்டார்.


Leave a Reply