தமிழிசையின் தந்தை தமிழக எம் பி- க்கள் கன்னித் தமிழ் காத்தமைக்கு வாழ்த்துரை

1977 ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியின் எம்பியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நாடாளுமன்றத்தில் தமிழில் பேச ஆரம்பித்ததுமே, “வெளியேறு, வெளியேறு” என்று இந்தியில் கத்துவார்கள். சிலர், “முட்டாள் உட்கார்” என்று இந்தியில் சத்தம் போடுவார்கள். நான் உட்காராமல் நின்று கொண்டே இருப்பேன்.

 

நான் வெளியே வந்தவுடன் இதுபற்றி செய்தியாளர்கள், நீங்கள் ஏன் உட்காரவில்லை என்று கேட்பார்கள். நான் சொல்வேன், முட்டாளே உட்கார் என்று சொன்னதைக் கேட்டு நான் உட்கார்ந்தால, அதை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். ஆனால், நான் அறிவுள்ள தமிழன் என்பதை உணர்த்தவே நின்று கொண்டிருந்தேன் என்று சொல்வேன்.இவ்வாறு தமிழில் பேசுவதற்காக பலமுறை அவையில் போராடி பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் தூக்கி வெளியேற்றப்பட்டேன்.

 

ஆனாலும் எனது தொடர் முயற்சியை நான் கைவிடவில்லை. அதன் காரணமாக தமிழில் பேசுவதற்கு 1978 நவம்பர் 20 ம் தேதி அனுமதி கிடைத்தது.தமிழில் கேள்வி கேட்டு பதிலும் பெற்றேன். அன்று முதல் நான் மன்றத்திற்குள் செல்லும்போதெல்லாம் மொழி பெயர்த்து சொல்வதற்காக இந்தி, ஆங்கிலம் மொழிபெயர்க்கும் புலமை பெற்றவர்கள் என்னோடு ஓடி வருவார்கள்.எனது பதவிக்காலம்வரை தமிழிலேயே கேள்வி கேட்டு பதிலும் பெற்று வந்தேன்.

 

எனது முயற்சி வெற்றி பெற்றது பற்றிக் குறிப்பிட்ட கலைஞர் கருணாநிதி அவர்கள், தனி மரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார் குமரி அனந்தன் என்று என்னைப் பாராட்டினார்.கொஞ்சநாள் நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது. அதன்பிறகு தமிழ் சத்தம் கேட்கவில்லை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லா உறுப்பினர்களும் தற்போது தமிழில் பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரையும் பாராட்டுகிறேன். கட்சி எல்லைகள் கடந்து எல்லோரும், கன்னித்தமிழ் வளர்க்க வேண்டும். தொடர்ந்து தமிழிலேயே கேள்விகள், கேட்டு பதிலும் பெறவேண்டும்.என, குமரி அனந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Leave a Reply