கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோர் கைது

குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோடை காலம் முடிவடைந்த நிலையிலும், கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சியின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து இன்று திமுக சார்பாக கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கோவை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகின்றது என்றும், கடந்த வருடம் மழை அதிகம் பெய்த நிலையில் நீரை சேமிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

கடந்த 8 ஆண்டு காலமாக குடிநீர் மேலாண்மை பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறையாக செய்யவில்லை எனவும், குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.மேலும்,கோவை மாநகரில் குடிநீர் விநியோகம் செய்ய சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஓப்பந்தத்தினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

காவல்துறையின் தடையை மீறி,குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய வலியுறுத்தின் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply