ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை வரும் 28-ம் தேதி வரை காவலில் வைக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேரை வரும் 28-ம் தேதி வரை காவலில் வைக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.

 

மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன.இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அதில் கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ஆகியோரை கைது செய்தனர். 3 பேரையும், பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தததில், இவர்கள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், இவர்களின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, இவர்கள் 3 பேர் மீதும் யு.ஏ.பி.ஏ. சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஷாஜகான் ,ஹபிபுல்லா, முகமது உசேன் ஆகிய 3 பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து போலீசார் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர். இதையடுத்து, தற்போது பந்தய சாலையில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேலின் குடியிருப்பிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது, வரும் 28-ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.


Leave a Reply