கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் மூலமாக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் எனும் மத்திய அரசு நிறுவனம் திட்டமிட்டு மின் கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த உயர் மின் பாதை தங்களது விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், உயர் மின் பாதையை கோபுரங்கள் அமைப்பு அமைத்து கொண்டு செல்வதைத் தவிர்த்து புதை வடத்தடத்தின் மூலமாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் அரசு செவிமடுக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலத்தை அளவீடு செய்வதற்காக கருமத்தம்பட்டி செம்மாண்டம் பாளையம், எலச்சிபாளையம் போன்ற பகுதிகளில் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அதிரடியாக அத்துமீறி நுழைந்து நில அளவீடு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடனும், அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பவர் கிரிட் நிறுவனத்தினர் நில அளவை தொடர்ந்து நடத்தினர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என 6 பேர் திடீரென உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போரட்டம் நடத்தினர்.காலையில் இருந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல் துறையினர் தங்களது பணியினை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதே போல் கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அருகே உயர்மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
இறுதியில் காவல் துறையினர் தங்களது பாதுகாப்பு பணியினை கைவிட்டு கலைந்து சென்ற காரணத்தாலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல் நலனையும் கருத்தில் கொண்டு தங்களது போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று காலை காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 175 க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் வந்த பவர் கிரிட் நிறுவனத்தினர் செம்மாண்டம்பாளையம்,செகுடந்தாளி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை அளவீடு செய்ய வந்தனர்.
அவர்களை நிலங்களை அளவீடு செய்தால் நிலங்கள் பாதிக்கப்படுவதோடு,விவசாயமும்,கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி நிலங்களின. உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இன்னும் விவசாயிகள் திரண்டு விடுவார்கள் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.போராட்டம் மேலும் வலுப்பெறும் சூழ்நிலை இருப்பதால் 10க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செகுடந்தாளி பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி கூறும் பொழுது இது போல் கடந்த 2008 ஆம் ஆண்டு உயர் மின்கோபுரம் அமைக்கும் போது தனது இரண்டரை ஏக்கர் நிலம் கையகப்படுதப்பட்டது.அதைப்போல் தற்போதும் தங்களது நிலத்தின் வழியாக உயர் மின் கோபுரம் அமைத்தால் மேலும் நான்கரை ஏக்கர் நிலம் பறிபோகும்.இதனால் தனது வாழ்வாதாரம் முழுவதுமாக அழிந்து விடும்.எனவே,தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு முன் வல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,அப்பகுதியை சேர்ந்த விவசாயி வசந்தி கூறுகையில் தங்களுக்கு இருக்கும் ஒரு ஏக்கர்,இரண்டு ஏக்கர் நிலத்தினையும் உயர் மின்கோபுரம் அமைக்க நில அளவீடு செய்து வருகிறார்கள்.இதனால் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நடுத்தெருவிற்கு தள்ளப்படுவோம் என்றும்,காவல் துறை அதிகாரிகள் தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாகவும்,போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசை வைத்து தங்களை மிரட்டினாலும் தங்களது போராட்டம் தொடரும் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு விவசாயிகளை கைது செய்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.