கோவை அருகே ஆதிவாசிகள் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சாடிவயல் அடுத்த போட்டபதி ஆதிவாசிகள் கிராமத்தை சேர்ந்த நஞ்சம்மாள் என்பவர் இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
அப்போது,திடீரென எதிரே வந்த ஒற்றை காட்டு யானை அவரை தாக்கி தூக்கி வீசி உள்ளது.இதில் காலில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் எழுப்பி உள்ளார். இதனையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாக வந்து யானையை விரட்டி அவரை மீட்டனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால்,மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நஞ்சம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. யானை தாக்கி நஞ்சம்மாள் உயிரிழந்ததால் முதல் கட்டமாக வனத்துறையினர் அவரின் இறுதிச் சடங்கிற்கு 50,000 ரூபாய் பணத்தை அவரது உறவினர்களிடம் வழங்கியுள்ளனர்.
ஆதிவாசிகள் கிராமத்தில் யானை தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இது குறித்து அவர்கள் கூறுகையில் காலம் காலமாக மலைப் பகுதியில் குடியிருந்து வரும் தங்களுக்கு யானைகளால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தற்போது சமீப காலமாக அங்கு சுற்றித் திரியும் ஒற்றை யானையால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.