புறவாசலில் இந்தியை நுழைக்கும் தென்னக ரயில்வே – கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

மத்திய அரசு இந்தியை திணித்தே ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டின் ஒருபகுதியாக தென்னக ரயில்வே புறவாசல் வழியாக இந்தி பேசாத தென்மாநில ரயில்வே துறையில் இந்தியை கட்டாயமாக்கும் நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்த பிறகு சுற்றறிக்கையை திரும்பப்பெறுவதாக கூறியிருந்தாலும் இந்த சிந்தனை எழுந்ததே தவறு என்று வலியுறுத்த விரும்புகிறேன்.

 

இதுகுறித்து மேலும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரயில்வே அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இவர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் போது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும். பிராந்திய மொழிகளில் பேசும் போது புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. நிலைய அதிகாரிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் நிலைய அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவு வன்மையான கண்டனத்துக்கு உரியது. கடந்த மார்ச் 9ஆம் தேதி மதுரை திருமங்கலத்தில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மொழிப் பிரச்னையே காரணமாக இருந்ததும், இதனை தொடர்ந்து, இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மொழி பிரச்சனையால் ஏற்பட இருந்த மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

 

மொழி பிரச்சினையின் காரணமாக ஒரு விபத்து என்பது தமிழகத்தில் இதுவரையில் இல்லை. ஆனால் இரண்டு மாதற்கு முன்னர் இது புதிய பரிணாமத்தை தமிழகத்தில் நடந்துள்ளது. இந்த நிலைக்கு பின்னரும் தென்னக ரயில்வே எதையும் கருத்தில் கொள்ளாமல் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும்தான் இந்த உத்தரவுகள் இருக்க வேண்டும் என்பது சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

தமிழகத்தில் வலுவான கண்டன குரல் எழுந்ததையடுத்து தென்னக ரயில்வே துறை தற்போது இந்த சுற்றரிக்கை திரும்பப்பெறுகிறோம் என அறிவித்துள்ளதாக அறிகிறோம். இதனை வரவேற்கிற அதேநேரத்தில் பழைய நடைமுறை தொடர வேண்டும் என்பது மட்டுமல்ல மாநில மொழி தெரிந்தவர்கள் மட்டும்தான் பணியில் அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

 

அது ரயில்வே மேம்பாட்டுக்காகவும் ரயில் விபத்துக்களை தவிர்க்கவும் பெருமளவுக்கு பயன்படும். மத்திய அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் புறவாசல் வழியாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக திணிக்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதை அழுத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.


Leave a Reply