தீவிரவாத செயல்களை கோவையில் அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.ஏறத்தாழ 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான ISIS பொறுப்பேற்றுக்கொண்டது.

 

இந்த நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கோவையில் கடந்த இரு தினங்களாக தேசிய புலனாய்வு அமைப்பினர் உக்கடம்,அன்பு நகர்,கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 300 க்கும் மேற்பட்ட ஏர் பிஸ்டல்கள்,சிம் கார்டுகள்,செல்போன்கள்,பென்டிரைவ்கள்,ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கோவை உக்கடத்தை சேர்ந்த முகம்மது உசேன்,அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான், கரும்புக்கடை  பகுதியை சேர்ந்த ஷேக் ஷபியுல்லா உள்ளிட்டோர் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட இயக்கமான ISIS அமைப்பின் தீவிரமான ஆதரவாளர்கள் என்றும்,இவர்கள் ISIS அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைத்தளங்களின் மூலமாக பரப்பியதும்,இவ்வமைப்பிற்கு அடித்தளம் அமைத்து அமைப்பின் சார்பாக தீவிரவாத செயல்களை கோவையில் அரங்கேற்ற சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

 

மேலும்,இவர்கள் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஜகரான் காசிமின் செயல்களை புகழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் முகம்மது உசேன்,ஷேக் ஷபியுல்லா,ஷாஜகான் உள்ளிட்டோர் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் பிரிவுகள் 18,38,39 unlawful activities ( prevention ) சட்டம் 1967 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் செல்போன்கள்,பென்டிரைவ்கள்,சிம் கார்டுகள்,கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள்,மெமரி கார்டுகள் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  கோவை மட்டுமல்லாது உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கோவை புகலிடமாக மாறி வருவதாக கருதப்படுகிறது.


Leave a Reply